News
Friday, February 17, 2017
தமிழகத்தின் தலை விதியை யாராலும் மாற்றவே முடியாது...!
தமிழகத்தில் 12 நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் மறைந்து ஓரளவு தெளிவான சூழல் தென்படத்துவங்கியிருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம். இந்தியாவில் ஆட்சி கலைப்பு பல முறை நடந்திருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலமுள்ளதாக சொல்லப்பட்ட சூழலில் கூட, உட்கட்சி பிரச்னை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை காரணம் காட்சி ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை கொடுக்காமலும் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தோடு உள்ள ஒருவரை ஆளுநர் முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவரின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை மீது சந்தேகம் எழுந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெரும்பான்மையை முதல்வராக பொறுப்பேற்றவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் கொடுக்கலாம். யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் ஆளுநர் ஆட்சியை கலைக்க அறிக்கை அனுப்பலாம். இதையடுத்து ஆட்சியை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
No comments :
Post a Comment