News

Tuesday, March 14, 2017

பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை: பாட்டில் இளநீர் அறிமுகம் 

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி நடந்த இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தின்போது, பன்னாட்டு குளிர்பானங்களை அருந்த மாட்டோம் எனக் கூறினர். அதன் எதிரொலியாக, வியாபாரிகள் சங்கங்களும் மார்ச் 1 முதல் தமிழகத்தில் உள்ள கடைகளில் பன்னாட்டு குளிர்பானங்களை விற்க தடை விதிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து, பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி நீரா நா.பெரியசாமி பேசும்போது, “உடல் இயக்கத்துக்கு தேவையான அனைத்துவித தாது உப்புகளும், தேவையான குளிர்ச்சி, இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்களில் வெப்பம் பரவாமல் தடுக்கவும், டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுவது இளநீர். கோடை காலங்கள் மட்டுமின்றி எல்லாவித காலநிலைகளுக்கும் ஏற்றது.

தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், 7 மடங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளதை வரவேற்கிறோம்.

அதேசமயம் மழைப்பொழிவு இல்லாததால், லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாசனம் செய்யும் நிலையில் தென்னை விவசாயிகள் உள்ளனர். பலரும் தென்னைக்கு மாற்றாக உள்ள விவசாயத்தை தேர்ந்தெடுக்கும் மனநிலையில் உள்ளனர்.

இளைஞர்கள் மத்தியில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், இயற்கையான இளநீர் பருக வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதற்கு தேவையான ஆதரவு நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.

இதையடுத்து, உடுமலை சுற்றுவட்டார விவசாயிகள் ஒன்றிணைந்து, முதல் முறையாக இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இத்திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் அவரவர் இடத்தில் இறக்கப்படும் இளநீரை, சுகாதாரமான முறையில் பாட்டில்களில் அடைத்து கடைகளில் விற்க முடிவு செய்துள்ளனர். இதனை வாங்கிப் பருகும் பொதுமக்களால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

தேங்காய் மூலமாக தயாரிக்கப்படும் தேங்காய் பால், ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை விரைவில் சந்தைப் படுத்த உள்ளோம்” என்றார்.

இந்நிலையில், பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக விவசாயிகளே ஒன்றிணைந்து இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளனர். இவற்றை மளிகைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், உடுமலை பெரியகடை வீதியில் நேற்று நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment