News
Sunday, February 26, 2017
யோகா கலையை காப்பாற்ற வேண்டியது அவசியம.்
கோவை: ‘‘பாரம்பரிய யோகா கலையை, அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது அவசியம்,’’ என, பிரதமர் மோடி, கோவை ஈஷா யோக மைய விழாவில் பேசினார். கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில், ‘ஈஷா யோகா மையம்’ சார்பில், 112 அடி உயர பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா பிப்24, நடந்தது.
பிரதமர் மோடி, ‘மகா யோகா யக்ஞம்’ நிகழ்ச்சியில், பங்கேற்று, சிலை பிரதிஷ்டையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய, ‘ஆதி யோகி – யோகத்தின் மூலம்’ என்ற, புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ‘எல்லோருக்கும் வணக்கம்’ என தமிழில் கூறி, தொடர்ந்து, ஆங்கிலத்தில் உரையாற்றினார். மோடி பேசியதாவது: மகா சிவராத்திரி தினத்தில் கோவையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைகொள்கிறேன். பல விழாக்கள் உள்ளன. எனினும் சிவனுடன் நேரடி தொடர்புகொண்ட இந்த மகாசிவராத்திரி விழா மகத்துவம் வாய்ந்தது. காரணம், மகாதேவன் ஒருவர் மட்டுமே என்பதே. பல மந்திரங்கள் உள்ளன. ஆனால், வலிமை வாய்ந்தது, சிவனுடன் தொடர்புடைய, மகா மிருதஞ்சயமந்திரம். ஈசனின் சிறப்பம்சத்துக்கு இதுவே சான்று. தெய்வீக வழிபாடு மூலம் ஒற்றுமையை உணர்த்துவதே, மகா சிவராத்திரி விழா. ஜாதி, மதம், நிறம் உள்ளிட்ட அனைத்தையும் மறந்து அனைவரும் ஒன்று, என்பதை உணர்த்தும் விழா இது.
மகா சிவராத்திரி விழா, இரவு முழுவதும் தொடரும். இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டும் என்பதை, மனிதர்களுக்கு உணர்த்தும் விழாவாகும். எனது பூர்வீக மாநிலமான குஜராத், சோமநாதரின் பூமி. மக்கள் பணியில் அர்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதால், என்னை காசி விஸ்வநாதரின் பூமி அழைத்து சென்றது. சோமநாதர் பூமியிலிருந்து விஸ்வநாதர் பூமிக்கும், தற்போது கோவைக்கும் என்னை அழைத்து வந்துள்ளது. இதிலிருந்து ஒன்று புரிகிறது. சிவன் அனைத்து இடத்திலும் இருக்கிறார் என்பதை இது உணர்த்துகிறது. இத்தகைய பூமியிலிருந்து வந்த காரணத்தால், மகாசிவராத்திரி விழாவில் பற்கேற்பது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. பக்தர்கள் உலகின் பல்வேறு மூலையிலிருந்து வந்தாலும், அவர்களின் வழிபாடு முறை வேறுபட்டிருந்தாலும், எண்ணம் ஆன்மிகத்தை உணர்வதே.
ஒவ்வொரு மனித இருதயத்திலும், இந்த ஆன்மிகத்தை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
112 அடி கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை முன் நிற்கும்போது, அனைவரும் யோகத்தின் மகத்துவத்தை உணரவேண்டும் என்பதை, அது பிரதிபலிப்பது போல் உள்ளது; சிவனுடைய மகத்துவத்தை நம்மை உணரச்செய்கிறது. பிப்25, யோகா பல துாரம் கடந்து வந்துள்ளது. பல முறைகள், பல பயிற்சிகள் என வேறுபட்டுள்ளது. இதுதான் யோகத்தின் மகிமை. பல செயல்முறைகள் இருந்தாலும், பிரசித்திபெற்ற கலையாக யோகா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜீவனில் இருந்து சிவனுக்கு அழைத்து செல்லும் கலையே யோகா. அறிவு, மனம், உடல் இவற்றை ஒருங்கிணைப்பது யோகா. மனிதர் மட்டுமின்றி, விலங்கு, பறவைகள் என சுற்றுப்புறத்திலுள்ள ஜீவ ராசிகளுக்கு ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதை உணர்த்துகிறது யோகா. ‘நான்’ என்பதிலிருந்து, ‘நாம்’ என்ற நிலைக்கு மாற்றுவதே, இந்த யோகாவின் மகத்துவம்.
ஒற்றுமைதான் இந்தியாவின் பலம். சிவனும், பார்வதியும் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம். சிவனின் கழுத்தில் பாம்பு உள்ளது. விநாயகரின் வாகனம் எலி. பாம்பும், எலியும் பரஸ்பர எதிரிகள். இருப்பினும் அவை ஒற்றுமையுடன் வாழ்கின்றன. முருகனிடம் பாம்பும், மயிலும் உள்ளது. இவை இரண்டும் பரஸ்பர எதிரிகள். எனினும் இவையும் ஒற்றுமையுடன் வாழ்கின்றன. சிவனின் குடும்பமே ஒற்றுமைக்கு உதாரணம் என்பதை, இது எடுத்துக்காட்டுகிறது. இதிலிருந்து, உலகில் ஒற்றுமை எவ்வளவு முக்கியத்துவம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எங்கெல்லாம் கடவுள் வழிபாடு உள்ளதோ அங்கு, விலங்கு, பறவை, மரம் ஏதேனும் ஒன்று இருக்கும். இயற்கை கடவுளுக்கு இணையானது. இயற்கை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை நம் முன்னோரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதை நாம் சிறுவயதில் இருந்து கடைபிடித்து வருகிறோம். இதனால்தான் கனிவு, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகள் இயற்கையாகவே நம்மிடம் உள்ளன.
நமது கலாசார வளர்ச்சியில் பெண்கள் அதிக பங்களிப்பு கொண்டுள்ளனர். பெண் என்றால் தெய்வீகம். மனிதன் நல்ல செயல் செய்தால் அவன் தெய்வீக நிலை அடைவான். இயற்கையாகவே பெண்களுக்கு தெய்வீக குணம் அவர்களுடன் ஒருசேர உள்ளது. ஆண்களே நல்ல செயல்களை செய்து மட்டுமே அந்த தெய்வீக நிலையை அடையமுடியும். மாறிவரும், 21ம் நுாற்றாண்டில் மனிதனின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. மன அழுத்தம் தொடர்பான வியாதிகள் அதிகரித்துள்ளன. மன அழுத்தத்தில் இருந்து விடுபட மது உள்ளிட்ட தீய பழக்கங்களை நாடுகின்றன.
யோகா பயிற்சியை மேறற்கொள்ளும்போது மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன், மன அமைதியும் ஏற்படும். பாரம்பரிய யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்ற வேண்டியது முக்கியம். உடல் நலத்துக்கு யோகா ஒரு பாஸ்போர்ட்டாக செயல்படுகிறது. வியாதியற்ற உடல்நலமே மிக முக்கியம். செயல், சிந்தனை, அனைத்திலும் மனிதர்கள் நல்ல முறையில் செயல்பட யோகா உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதில் பல முறைகள் உள்ளன. உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் யோகிகள் என கூறமுடியாது. யோகா மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில், வெற்றிகரமாக, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
No comments :
Post a Comment