News

Friday, February 24, 2017

மகா சிவராத்திரி: பலன்கள்

இன்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் சிவன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பிரதான கோவில்களில், அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராத்திரி என்ற சொல், சகலமும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி என்பது நித்ய சிவராத்திரி; மாத சிவராத்திரி; பட்ச சிவராத்திரி; யோக சிவராத்திரி; மாக சிவராத்திரி என, ஐந்து வகைப்படும்.மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்தசி, அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி. சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தர்; இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தி; மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவர்; நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரர் வழிபாடு நடக்கும்.

இந்த நான்கு காலங்களிலும், கருவறையிலுள்ள மூலவருக்கு ஆகம முறைப்படி, அபிஷேகங்கள் செய்து, வழிபாடு நடக்கும். மூன்றாம் காலமான லிங்கோத்பவ காலம் என்பதால் கருவறைக்குப் பின் உள்ள லிங்கோத்பவருக்கு வழிபாடு நடக்கும். அப்போது, ஸ்ரீருத்ர பாராயணம்; ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்கள் உச்சரித்தல்; தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகை பாராயணம் செய்தல் ஆகியவை நடக்கும்.

கோடி புண்ணியம்: சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால், கோடி புண்ணியம் கிடைக்கும். எனவே, சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. 

No comments :

Post a Comment